தமிழ்ச் சொந்தங்களை வணக்கம் சொல்லி வாழ்த்தி மகிழ்கிறது சான் ஆண்டோனியோ தமிழ்ச்சங்கமும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும்.
பண்பு நிறை இலக்கியங்கள் பல கொண்டு பெரும்புகழ்த் தொல்காப்பியமும் கம்பனது காவியமும் அறநிறை திருக்குறளும் எம்மனமும் உருகவைக்கும் ஏற்றமிகு திருவாசகமும் தன்னகத்தே கொண்டு மங்காப் புகழ் கொண்ட மொழி தனக்கு நிகரொன்றும் இல்லாத மொழி தமிழ்!
அந்தத் தன்னேரில்லா இனிய தமிழ் மொழியை தாய்மொழியாய் கொண்ட தமிழினத்திற்காக எப்பணிக்கும் உயர்பணியாம் எம் தாய் தமிழுக்கும் தமிழ்ச் சொந்தங்களுக்கும் உழைப்பதே யாம் பெற்ற பெரும்பேறு என எப்போதும் உழைத்துக் கொண்டிருக்கும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் வெள்ளி விழாக் கண்ட சான் ஆண்டோனியோ தமிழ்ச்சங்கமும் இதுவரை ஆற்றிய தமிழ்த் தொண்டுகளுக்கெல்லாம் தலையாயதாய்க் கருதி தமிழன்னையின் புகழ் மகுடத்தில் வையமெல்லாம் ஒளிவீச வைரமாமணி பதித்திடும் வண்ணம் பேரவையின் 37வது தமிழ் விழா வரலாற்று நகரம், சிங்காரச் சென்னையோடு தமைக்கை உறவுநகரம் (Chennai sister city), டெக்சாஸ் மாநிலத்தின் சான் ஆண்டோனியோவில் 2024ஆம் ஆண்டு ஜூலை 4 முதல் ஜூலை 6 தேதிகளில் நடத்துவதில் சிந்தை செம்மாந்து மகிழ்ச்சியில் திளைக்கிறது சிறகடித்துப் பறக்கிறது.
இத்தமிழ் விழாவின் வாயிலாக வட அமெரிக்கா வாழ் தமிழ்ச் சொந்தங்களையெல்லாம் ஒருங்கிணைத்து தமிழ் மொழி, பண்பாடு, கலை மற்றும் மரபுகள் பேணிப் பாதுகாக்கும் விழாவாக மட்டுமல்லாமல் சமத்துவமாய் தனித்துவமாய் தமிழ் மொழி அறிவியல் தொழில்நுட்பம், தகவல் தொழில் நுட்பம், மொழியியல், மானிடவியல், கல்வெட்டியல், இதர அறிவுசார் துறைகள் என அனைத்திலும் தொடர்ந்து வளர்ச்சி கண்டு தமிழும் தமிழினமும் என்றும் ஏற்றம் பெற்றிட வேண்டும் என்ற ஆவலுடன் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளோம்.
இத்தகைய அரும்பணிகளுக்கெல்லாம் இயக்கு திறனாக அமைந்திட தக்க வகையில் பேரவையின் 37வது தமிழ் விழாவிற்கு தமிழ்ச் சொந்தங்களே வருக!
"எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!" என பெருமையுடனும் பேரன்புடனும் உங்கள் அனைவரையும் வரவேற்கிறது சான் ஆண்டோனியோ தமிழ்ச்சங்கம்!